வியாழன், அக்டோபர் 28, 2010

தமிழ் நடனக்கலை : பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா


கலைகள் வாழ்வியலின் அன்றாட விடயங்களை வெளிப்படுத்தி நின்றதால், காலத்தின் கண்ணாடியாக அவை விளங்கின. சாதாரண மக்களின் இன்ப துன்பங்களையும், தலைவன் தலைவிக்கு இடையிலான ஒழுக்கங்களையும், காதலையும், வீரத்தையும் காட்டுவனவாகவே தமிழ்க்கலைகள் எழுந்தன. செளிப்போடு வளர்ந்தன. சிறப்பாக வாழ்ந்தன. அவற்றின்மூலம் அன்றைய தமிழ்ச் சமுதாயத்தில் நிலைபற்றியும், வாழ்க்கை முறைபற்றியும் இன்றுவரை நாம் அறியக்கூடியதாகவிருக்கின்றது.

பல்வேறு கடவுள்களைப் பாத்திரங்களாக்கி, இல்லாத நடைமுறைகளைச் சம்பவங்களாக்கி சொல்லுகின்ற கலைகள் தமிழர்களிடம் இருந்ததில்லை. இலக்கியங்களும் அப்படி எழுந்ததில்லை. அதனாற்றான் பண்டைய தமிழகத்தின் கலப்பற்ற தன்மையை பறைசாற்றும் விதமாக உண்மையான இலக்கியங்கள் அந்நாளில் உருவாகின. அன்றைய தமிழகத்தினை அறிவதற்கு இன்று நமக்கு உதவுவன அத்தகைய இலக்கியங்களும் கலைகளுமே.

பரதநாட்டியம் தமிழ் நாட்டியமே. இற்றைக்கு 2000 வருடங்களுக்கு முன்னரே செந்தமிழ் மக்களிடையே சீரோடு வளர்ந்த கலை, சிறப்போடு இருந்த கலை, வளமோடு அமைந்த கலை, வனப்போடு மிளிர்ந்த கலை நமது தமிழ் நடனக்கலை

அந்த நடனக்கலை தான் பரதநாட்டியக்கலை. தில்லையிலே சிவபெருமான் ஆடுவதாகச் சொல்லப்படுவதும் அந்த நாட்டியம்தான் சிலப்பதிகாரத்திலே மாதவி ஆடியதாகச் சித்தரிக்கப்படுவதும் அந்த நாட்டியம் தான்.

காலங்காலமாக காவிரிப்பூம் பட்டினத்திலே ஆண்டுதோறும் நடந்தவந்த இந்திரவிழாவிலே ஆடப்பட்டது பரதநாட்டியம். சோழமன்னன் கரிகால் வளவன் காலத்திலே கலையரசி மாதவியின் கலைநிகழ்ச்சிகள், இந்திரவிழாவிலே நடைபெற்றனவென்பதையும், அக்கலை நிகழ்ச்சிகளிலே பரதநாட்டியமும், இசைப்பாடல்களும், மற்றும் பதினொருவகையான ஆடல்களும் இடம்பெற்றன என்பதையும் சிலப்பதிகாரம் மூலம் அறிகின்றோம்.

சிலப்பதிகாரம் சங்கமருவிய காலத்து நூல். அதற்கும் முந்திய சங்ககாலத்திலேயே நன்கு வரையறுக்கப்பட்ட ஆடல்வகைகள் தமிழில் இருந்தமைக்குச் சான்றுகள் உள்ளன. அந்த ஆடல் வகைகளைப்பற்றிய இலக்கணங்களை வகுத்த நூல்கள் எழுதப்பட்டுள்ளன. நாட்டியக்கலை முத்திரைகள் அக்காலத்திலேயே நயம்பட விளக்கப்பட்டுள்ளன.

ஆரியர்களின் வருகையும் அரசர்களிடம் ஆரியப் பிராமணர்கள் கொண்டிருந்த செல்வாக்கும், அதன்காரணமாக 500 ஆண்டுகளுக்குமேலாக தமிழ் அரசவைகளிலே வடமொழி கொலுவீற்றிருந்ததும் தமிழ்மக்களின் மொழிச்சிதைவுக்கும், பண்பாட்டுச்சிதைவுக்கும் காரணமாயின. அக்காலங்களில் ஆரியப்பண்பாடுகள் தமிழர்களிடையே கலந்தன. அவர்களின் வழிபாட்டுமுறைகள் புகுந்தன. நமது பாரம்பரியங்கள் சிதைந்தன. அதனால் இலக்கியங்களும் தமிழ்ப்பண்பாடுகளைப் புறந்தள்ளின.

நாட்டியம்பற்றிய தமிழ் நூல்களை ஆரியர்கள் வடமொழியில் மொழிபெயர்த்துவிட்டு, மூலத்தமிழ் நூல்களை யாருக்கும் கிடைக்காமல் மறைத்தார்கள். அக்கினியிலே போட்டு எரித்தார்கள். அதனால், பரதநாட்டியம் வடமொழியிலிருந்து நமக்கு வந்து சேர்நததாக இப்போது நம்மவர்களே வாதிடுகிறார்கள்.

அக்காலத்தில் நிலவிய சமுதாய நிலமைகளுக்கேற்பவே கலைகளும் இலக்கியங்களும் எழுந்தன. வடமொழியையும் ஆரியப்பண்பாடுளையும் பரப்புவதிலும் தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாடுகளையும் சிதைப்பதிலும் மிகுந்த அக்கறைகாட்டிய பிராமணர்களே பெரும்பாலான இலக்கியங்களை ஆக்கினர். பிராமணருக்கே கல்வி என்கின்ற பிற்போக்கான கோட்பாடும் அன்று திணிக்கப்பட்டதால் கல்வியில் உயர்ந்தோர் பிராமணர்களாகவே இருந்தனர்.

இலக்கியங்களை ஆக்குகின்றவர்களும் பிராமணர்களாகவே இருந்தனர். இலக்கியங்களும் அவர்களது எண்ணங்களுக்கு ஏற்பவே எழுந்தன. அதனால் தமிழில் வடமொழி கலந்தது. தமிழ்ப் பண்பாட்டில் ஆரியம் புகுந்தது. இவைஎல்லாவற்றையும் உள்ளடக்கி இலக்கியம் எழுந்தது. இவற்றின் காரணமாக உருவான கலையும் இலக்கியமும் அன்றைய காலத்தைக்காட்டி நின்றன.

கர்நாடக இசைக் கலையும், பரதநாட்டியக் கலையும் உண்மையிலேயே வடமொழியிலேயே முதன்முதலில் தோன்றியிருந்தால், வடமொழிக்கே சொந்தமான கலைகளாகவிருந்தால், இந்திய துணைக்கண்டத்திலே வடமொழி தோன்றி வளர்ந்த வடமாநிலங்களிலே அந்த இசைக்கலையும், நாட்டியக் கலையும் வளர்ந்து நிலைத்திருக்க வேண்டும். வாழ்ந்து சிறந்திருக்க வேண்டும். அவற்றின் சான்றுகளாக வானுயர்ந்த கோபுரங்கள் எழுந்திருக்க வேண்டும். அழகிய சிற்பங்கள் அவற்றிலே அமைந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு எதுவுமே அங்கே நடைபெறவில்லை. இசைக்கலையும்சரி, நடனக்கலையும்சரி, சிற்பக்கலையும் சரி எல்லாமே தென்னிந்தியாவிலேயே சிறப்புற்றோங்கியிருப்பதன் காரணம் அவை தென்னிந்தியக் கலைகள் என்பதால்தான். தொன்மைமிகு தென்னிந்திய மொழியான செந்தமிழ் மொழிக்குச் சொந்தமான கலைகள் என்பதால்தான்.

ஆரியர்கள் தமிழகத்தில் வாழவந்தார்கள். அந்தணர்கள் என்று பிராமணர்கள் ஆலயங்களைச் சூழவந்தார்கள்;. ஆடல் மகளிரை ஆலயங்களுக்கு அருகாமையில் வாழவைத்தார்கள். ஆலயங்களிலெல்லாம் அவ்வப்போது ஆடவைத்தார்கள்.

மன்னர்களும் பிரதானிகளும் இந்த மகளிரிடம் வந்து போகத்தொடங்கினார்கள்;. அதனால் ஆடல்மகளிர் ஆரியர்களினால் கூடல் மகளிர் ஆனார்கள். பரதநாட்டியமாக இருந்ததை பரத்தையர் நாட்டியமாக்கினார்கள். உயர்வான கலையாக இருந்ததை இழிவான தொழிலாக மாற்றினார்கள்.

ஆரியரின் வருகையினாலும் வடமொழி வெறிபிடித்த பிராமணர்களாலும் தமிழ் மொழி சிதைந்தது. தமிழ்ப் பண்பாடு சிதைந்தது. தமிழ் வணக்கமுறைகள். மாறின. அதேபோல பண்பட்ட இந்தப் பரதநாட்டியக்கலையும் புண்பட்டுப் போயிற்று. அதனால் கணிகையர் மட்டுமே ஆடுகின்ற அளவுக்கு இந்தக்கலை தமிழ் மக்களிடம் சுருங்கியது. நடனம் ஆடுபவர்கள் எல்லோருமே கணிகையர் என்ற விசக்கருத்து மக்களிடத்தே நெருங்கியது.
பண்பாடுமிக்க தமிழ் மக்கள் பரதக்கலையில் ஆர்வம் குறைந்தார்கள். ஆடியவரும் பழிச்சொல்லுக்கஞ்சி ஆடுவதை மறந்தார்கள். ஆட்டத்தையே துறந்தார்கள்.

அதனால் கணிகையராய் இருந்தோர் மட்டும் இந்தக் கலையியலே சிறந்தார்கள். தமிழ் மொழியிலேயிருந்து கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் தோன்றியபோது பண்டைய தமிழ்க் கலைகளும் பறிபோயின. கொண்டவர் நினைத்ததுபோல் உருமாறின.

நமது கலையை நாம் ஒதுக்கினோம். மற்றவர்கள் அந்தக்கலையின் மகிமையை உணர்ந்தார்கள். தமக்குச் சொந்தமாக்கி மகிழ்ந்தார்கள். அன்று நமக்குச்சொந்தமாயிருந்த பரதநாட்டியம் இன்று மற்றவரிடமிருந்து இறக்குமதியான சொத்தாக நம்மை எண்ணவைக்கிறது.

தமிழிலிருந்து திரிந்து இப்போது தனியாக விளங்குகின்ற எந்த மொழிகளுமே சிலப்பதிகாரக் காலத்திலே இருந்ததில்லை.

தில்லைக்கூத்தனே தென்பாண்டி நாட்டானே என்று மணிவாசகர் திருவாசகம் பாடியபோது இன்று பரதநாட்டியத்திற்குப் பக்கப்பாட்டுப் பாடுகின்ற சில மொழிகள் தோன்றியிருக்கவேயில்லை.

ஆக நாட்டியமும் நம்முடையது. கூத்தும் நம்முடையது. இவற்றுக்கான பாட்டுக்களும் நமக்கென்று உள்ளன. ஆனால் என்ன செய்வது? மற்றவர்கள் நமது குழந்தைக்குப் பட்டுச்சட்டை போட்டு தமது குழந்தை என்கிறார்கள். நம்மவர்களும் அதை ஏற்றுக்கொள்கிறார்கள்.

இன்று சிங்கள இனத்தவரும் பரதநாட்டியத்திலே சிறந்து வருகிறார்கள். தமிழ் ஆசிரியைகளிடம் பயின்று வருகிறார்கள். அதில் தவறில்லை. ஆனால் இன்னும் சில ஆண்டுகளில் இலங்கையில் என்ன நடைபெறப்போகிறது. சிங்களப்பாடல்களில் பரதக்கலை ஜொலிக்கும். நம்மவர்க்கும் அது மிகவும் பிடிக்கும். எதையும் உள்வாங்கிக்கொள்வதில் இன்புறுகிற தமிழன் அதையும் உள்வாங்கிக் கொள்வான். சிங்களமே பரதநாட்டியத்தின் மூலமாகும். நம்மர்க்கும் அதுவே வேதமாகும்.

இப்படியே தொடர்ந்தால் என்னவாகும்? செந்தமிழ் நம்மவர்க்குப் பாரமாகும்;. நமது கலை நம்மைவிட்டுத் தூரமாகும். இதற்கு என்ன செய்ய வேண்டும்? ஆடும் சதங்கைகள் செந்தமிழ்ப் பாடல்களுக்கே ஆடவேண்டும்.

பாடும் கலைஞர்கள் பைந்தமிழ்ப் பாடல்களையே பாடவேண்டும். வாழும் பரதக்கலை நம் வண்ணத்தமிழ் மொழிக்கே செந்தமென ஊரும் உலகும் உணரவேண்டும். நமது மொழியில் நாம் பாடினால் நமது பாட்டுக்கு நாம் ஆடினால் நல்ல புதுமைகளை நாம் தேடினால் நமதுகலை நம்மை விட்டு எங்கே போகும?; எப்படிப் போகமுடியும்?

இன்னும் எத்தனை நாட்களுக்கு ஐவருக்கு மனைவியான பாஞ்சாலியை தெய்வம் என்று சொல்லுவது போன்ற ஆரியரின் பொய்யான கதைகளையும், தமிழ்ப்பண்பாட்டுக்கு ஒவ்வாத கதைகளையும், பண்டைத்தமிழ் இலக்கியத்திலே இல்லாத கதைகளையும் கையாளப் போகின்றோம்.?

இன்னும் எத்தனை நாட்களுக்கு வெண்ணெய் உண்ட கண்ணனின் விளையாட்டுக்களை வேடிக்கை காட்டப்போகிறோம்?

இன்னும் எத்தனை நாட்களுக்கு கோபியரோடு கொஞ்சுகின்ற கோபாலனின் குறும்புகளைக் கூறியாடப்போகின்றோம்?.

இன்னும் எத்தனை நாட்களுக்கு ஆரியக்கலாச்சாரத்தின் அடிமைகளாய் இராமனையும் சீதையையும் பராயணம் செய்யப் போகின்றோம்?.

இன்னும் எத்தனை நாட்களுக்கு சொன்னதையே சொல்லிக்கொண்டு புதிதாய் எதுவுமே செய்யாமல் சோம்பேறிகளாய் இருக்கப்போகிறோம்?

எப்படிப்பட்ட கலைஞராக நாம் இருந்தாலும் முதலிலே தமிழர் என்பதை நினைக்கவேண்டாமா?

கலை என்பது காலத்தின் கண்ணாடியாக இருக்கவேண்டாமா?

நமது கலையினால் நமது நிலையை வெளிப்படுத்த வேண்டாமா?

அகன்ற உலகெங்கும் தமிழ்மக்கள் பரந்துவாழும் காரணத்தை சிறந்த நாட்டியமாய் சித்தரிக்க வேண்டாமா?

புலம்பெயந்த தமிழர்கள் உளம் பெயந்த காரணத்தால் மொழிமறந்து, இனம் இழந்து அனாதைகளாய் ஆகும்நிலை இன்று உருவாகிக்கொண்டிருக்கின்றதே அது பற்றிப் பாடி ஆடக்கூடாதா?

தாயகத்திலே நமது இனம் தவித்துக் கொண்டிருக்கின்றதே அதைப்பற்றி அபிநயம் போடக்கூடாதா?

வாழத்துடிக்கின்ற ஈழத்தமிழர்கள் கூழுக்கும் வழியற்று குற்றுயிராய்க்கிடக்கிறார்களே காலின் சதங்கைகள் அதுபற்றிக் கணீரென்று ஒலிக்கக்கூடாதா?

சிறையிலே வாடுகின்ற தமிழ் இளஞர்களின் நிலையினைச் சித்தரித்து நாட்டியம் போடக்கூடாதா?

முறைகெட்ட வகையிலே சிதைபட்டுப் போன நம் சகோதரிகளின் கண்ணீரையெல்லாம் காவியமாய் ஆடக்கூடாதா?

கதையாய் மட்டுமே இருக்கின்ற கண்ணனையும் இராமனையும் விதவிதமாய் கதைபின்னி ஆடுகிறோமே, கதையாகவல்ல, கற்பனையாகவல்ல, உண்மைக்கு உண்மையாய் வரலாறாய் நின்று, மாபெரும் சேனைகளை வென்று இமயத்தில் கொடிபதித்தார்களே முடியுடை மூவேந்தர்கள். நாட்டியமாய் அவர்களது வீரமிகு சாதனைகளை நாட்டவேண்டாமா?
நாட்டவேண்டும். நடனக் கலைமூலம் காட்டவேண்டும்.

கப்பல் கட்டிக், கடல்கடந்து உலகெங்கும் வாணிபம் செய்து பெயர் பெற்ற தமிழன், இன்று அகதியாய் நடுக்கடலில் நாதியற்று மாண்டுபோகிறானே அவன்கதையை நாட்டியமாய் ஆடக்கூடாதா?

சொந்த நாட்டிலும், உயிர்காக்கப் புலம்பெயர்ந்து சென்ற நாடுகளிலும் முகாம்களிலே முகம்தெரியாமல் முடங்கிக் கிடக்கிறார்களே எண்ணிக்கையற்ற ஈழத்தமிழர்கள் அவர்களின் சோகக் கதைகளை நாட்டியத்தில் சொல்லக்கூடாதா?

இவையும் கலைதான். இவைதான் உயிர்த்துடிப்பான கலைகள் உண்மையான கதைகள். இவைதான் கலைஞரின் ஆற்றலை வெளிப்படுத்தும் கலைகள்.
தமிழ் இனத்தின் தனித்துவத்தை நிலைநாட்டும் கலைகள்.
காலத்தைக் காட்டுகின்ற கலைகள். காலத்தை வென்றுநிற்கும் கலைகள்.

ஆடுவோரும் பாடுவோரும் இதனை உணரவேண்டும்.
தாயின்றி நாமில்லை தமிழின்றி நம் இனமில்லை என்பதை ஆடவல்லோரும் பாடவல்லோரும் ஆடலும் பாடலும் பயிற்றுவிப்போரும் உணரவேண்டும்.

தாய்மொழி தொடர்பாக தமக்கொரு கடமை உண்டு என்று கருதவேண்டும். தமிழினம் தொடர்பாக தமக்கொரு கடப்பாடு உண்டு என்று நினைக்க வேண்டும்.

கலைஞர்கள் இதனைச் செய்யவேண்டும்.தமிழினத்தின் வரலாற்றை கலைகளிலே நெய்யவேண்டும்.

நன்றி: இனிஒரு.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக